சென்னையில் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்ததால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி தந்தைக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த திருவேற்காடு, கஸ்துாரிபாய் அவென்யூவைச் சேர்ந்தவர் காத்திகேயன் (25) தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரக்சனா (21) என்பவருக்கும், கடந்த, 26ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ரக்சனாவுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் தனியாக இருந்த ரக்சனா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மாமியார், இரவு வீட்டிற்கு சென்றபோது, ரக்சனா தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து, உடனே திருவேற்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரக்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தற்கொலைக்கு முன், தன் தந்தையின் மொபைல் போனுக்கு, அவர் ஒரு வீடியோ அனுப்பி உள்ளார். அதில்,  எனக்கு விருப்பம் இல்லாத திருமணத்தை செய்து வைத்து விட்டீர்கள். என்னுடைய மனதில் வேறு ஒருவர் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் நரக வேதனை இருந்ததாகவும், ஆகையால், இந்த முடிவை எடுத்துவிட்டேன்' என, கண்ணீருடன் உருக்கமாக தெரிவித்துள்ளார். ரக்சனா தற்கொலை தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.