புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில், பழமை வாய்ந்த காரைக்கால் அம்மையார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

இதையொட்டி, கடந்த 13ம் தேதி, இந்தாண்டுக்கான மாங்கனி திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பரமசிவன் அடியார் கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண பல்வேறு பகுதிகளில் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, தங்க கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா வந்தபோது, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், மாங்கனிகளை இறைத்து சிவனை வழிபட்டனர்.

திருவிழாவையொட்டி, மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்கள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் இத்திருவிழாவைக் காண ஏராளமானோர் வந்துள்ளனர்.