ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையைப் பரிசாக வழங்கினார்.
கத்தார் தலைநகர் தோகாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்துமுடிந்தன. இந்தப் போட்டியில் 17 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்தது. இந்தத் தொடரில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமைத் தேடி தந்தார். அவருக்கு பாராட்டு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 10 லட்சம் ரூபாய் திமுக சார்பில் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

 
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் கோமதி மாரிமுத்து மு.க.ஸ்டாலினை இன்று காலை சந்தித்தார். அப்போது அவருடைய வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்த ஸ்டாலின், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை  வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கோமதி, ‘ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். கஷ்டப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்.’ என்று தெரிவித்தார்.