Asianet News TamilAsianet News Tamil

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை அக்டோபருக்குள் வெளியிட வேண்டும்…. - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Local elections should be announced by October Supreme Court Action Order
Author
Chennai, First Published Jul 18, 2019, 11:10 AM IST

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை வரும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களை கூறி தற்போது வரை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது.

இதில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மட்டும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். வழக்கு கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.

இதில் கடந்த விசாரணையின் போது உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் 2 வாரத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 31ம் தேதிவரை கூடுதல் அவகாசம் வேண்டும் என கடந்த 15ம் தேதி பதில் மனுவை தாக்கல் செய்து தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக்குப்தா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரும் வழக்கறிஞருமான ஜெய்சுகின் வாதத்தில், வார்டு மறுவரையறை பணி நடைபெறுவதாக கூறி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்து கால தாமதம் செய்து வருகிறது என வாதிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் தரப்பு வாதத்தில், அக்டோபர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பாணை வெளியிடப்படும். இதையடுத்து அடுத்த ஒருமாதத்தில் தேர்தல் கண்டிப்பாக நடத்தி முடிக்கப்படும் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான திட்டத்தை ஏன் மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து வெவ்வேறு தேதிகளில் மாற்றி காலதாமதம் செய்து வருகிறது என்பது புரியவில்லை.

இதில் வரும் அக்டோபர் இறுதி வாரத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை கட்டாயம் வெளியிட்டு அதற்கான தேதியை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, தேர்தல் தொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.

 

இதேபோல் உள்ளாட்சி அமைப்பு தேர்தலின் போது பெண்களுக்கு 50சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என ஈரோட்டை சேர்ந்த ராதாமணி பாரதி என்பவர் வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios