167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கம்.. சென்னையில் பறிமுதல்.. தேசிய கட்சி பிரமுகருக்கு தொடர்பா?
2 மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்திய சென்னை யூடியூபர் ஏர்போர்ட்டில் வாடகைக்கு கடை எடுத்து செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் இதில் தேசிய கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு கரன்சிகள், அரிய வகை வன உயிரினங்கள் போன்றவற்றை பலரும் சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிந்தும் கடத்தி வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடிக்கடி விமான நிலையங்களில் அடிக்கடி சோதனை நடத்துவது வழக்கம்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கடையை மையாக வைத்து கடத்தல் சம்பவம் நடைபெறுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பிறகு சுங்கத்துறையின் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னையைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் கடையின் உரிமையாளருமான சபீர் அலியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
விமான நிலைய புறப்பாடு பகுதியில் செயல்பட்டு வரும் சபீரின் கடைக்கு கடத்தல் தங்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள் கழிவறையில் தங்கத்தை வைத்துவிட்டு செல்வார்கள். இதை கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்துவிடுகின்றனர். அந்த கடையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கம் சபீர் அலியின் கடை மூலமாக கடத்தப்பட்டுள்ளது. இதற்காக 3 கோடி ரூபாய் சபீர் அலி பெற்றுள்ளார்.
சபீர் அலியின் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அடையாள அட்டையை வைத்திருந்ததால் அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது அடிக்கடி சோதனை செய்யப்பபடாமல் தப்பித்துள்ளனர். இந்நிலையில், சபீர் அலி, அவர் கடையில் பணியாற்றும் 7 ஊழியர்கள் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணையில் நடத்தி வருகின்றனர்.
சபீர் அலி மற்றும் மேலும் இரண்டு நபர்களுக்கு விமான நிலையத்தில் கடைகளை வைக்க தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி தேசிய கட்சியின் மாநில பிரமுகர்களுக்கும், இந்த கடத்தலுக்கும் சம்பந்தம் இருக்குமா ? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை திருப்பி உள்ளனர்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டு கேரளாவில் கைப்பற்றப்பட்ட 30 கிலோ தங்கத்திற்கு என்.ஐ.ஏ (NIA) உள்ளே வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது. அமலாக்கத்துறை உள்ளே வந்தது. இப்பொழுது கைப்பற்றப்பட்டிருப்பது 267 கிலோ தங்கம். இதில் அரசியல் பின்புலம் உள்ளவர்களின் தொடர்பு இருப்பதால், ED, NIA விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தியின் பேச்சால் இந்துகளின் மனம் புண்பட்டுள்ளது; தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்