மதுரையில் கோவில் திருவிழாவில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பக்தர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை வைகை ஆற்றில் அமைந்துள்ள மைய மண்டபத்தின் அருகே உள்ள கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வந்தனர். 

அப்போது, திருவிழாவுக்கு வந்த கரும்பாலை பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை 7 பேர் கொண்ட கும்பல் திடீரென தாக்கியது. தப்பியோட முயன்ற ராஜசேகரை பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் விரட்டி சென்று அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதை கண்ட பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜசேகர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதால், முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.