கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் புதிய திருப்பமாக வீடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறித்தான் கோடநாடு எஸ்டேட்டில் புகுந்து ஆவணங்களை திருடியதாகவும் அப்போது எதிர்பாராத வகையில் காவலாளியை கொலை செய்ய வேண்டியது ஆகிவிட்டதாகவும் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருந்தனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப்படம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல், கூலிப்படையைச் சேர்ந்த சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக சயன் மற்றும் மனோஜ் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரை எடுத்துவிட வேண்டும் என்று சயன் மற்றும் மனோஜிடம் பிரதீப் என்பவர் பேரம் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரை உள்ளே இழுத்துவிட்டால் தான் சாத்தியமாகும் என்று பிரதீப் என்கிற நபர் மனோஜ் மற்றும் சயனிடம் பேரம் பேசுவது போன்று அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மிகவும் சென்சிட்டிவான இந்த வீடியோ வெளியானது எப்படி என்கிற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சிறையில் சயன் மற்றும் மனோஜ் மிரட்டுவதாக கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வீடியோ வெளியாகி கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. அதாவது சிறையில் இருக்கும் சயன் மற்றும் மனோஜ் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது பிரதீப் என்பவர் குறித்து கூறியுள்ளனர். கோடநாடு விவகாரத்தில் தங்களுக்கு பின்னணியில் இருப்பது பிரதீப் தான் என்றும் தெரிவித்துள்ளனர். 

இதன் அடிப்படையில் அந்த பிரதீப் யார் என்று கண்டுபிடித்து விசாரிக்க வேண்டிய முறைகள் விசாரித்து அவரிடமிருந்து இந்த வீடியோவை போலீசார் பறிமுதல் செய்து கொடுக்க வேண்டி அவர்களிடம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். இதனை மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதிய அந்த பெரிய மனிதர்கள் உடனடியாக தமிழ் சப்டைட்டில் ஏற்பாடு செய்து அந்த வீடியோவை வைரல் ஆக்கியுள்ளனர். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் பிரதீப்பின் பின்னணி குறித்து போலீசார் மிகப் பெரிய உண்மையைக் கண்டறிந்து உள்ளனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அந்த உண்மையை வெளியிட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த மிகப் பெரிய பிரபலம் ஒருவரை கைது செய்யவும் திட்டம் தயாராகி வருகிறது.