பாலக்காடு கார் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கோவை கரும்புக்கடை பாரதி நகரை சேர்ந்தவர் பைரோஜ்பேகம் (65). இவருக்கு மெகராஜ் (31), பீனாஷ் (30), பரிதா (29), ஷாஜிதா (28) உள்பட 5 மகள்களும், மொய்தீன்அபு என்ற மகனும் உள்ளனர். பைரோஜ் பேகத்தின் அண்ணன் ஷேக் பாலக்காடு சந்திர நகரில் வசித்து வருகிறார். அவரது மருமகள் கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு சீர் செய்வதற்காக நேற்று மதியம் பைரோஜ் பேகம் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்பட 12 பேருடன் ஆம்னி வேன் ஒன்றில் கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. 

அப்போது எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் சாலையோரம் நின்றிக்கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், பாலக்காடு அருகே உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.