ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவர் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் கழித்தார். 

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில், தங்களை ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கக்கோரி தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அத்துடன் ஜெயலலிதா வரி பாக்கி வைத்திருந்தாலும் அதனை செலுத்தத் தயார் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து ஆகஸ்ட் 5-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணி தற்போது என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.