மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 -ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் தலைவர் கூறி வந்தனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையி்ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்போலோ நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்திருந்தது. 

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழக பொதுத்துறை, ஆறுமுகசாமி ஆணையம், சசிகலா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.  

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 21 மருத்துவ குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஆறுமுகசாமி விசாரணைக்கு தடையில்லை எனவும், டாக்டர்கள் ஆஜராக விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரிக்கட்டுள்ளது.