ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆணையம் அமைக்கப்பட்டது. 2017 நவம்பர் 22ம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையைத் தொடங்கி அப்பல்லோ மருத்துவர்கள், நிர்வாகத்தினர் உள்பட இதுவரை 150க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

ஆனால் இந்த ஆணையத்தின் விசாரணை மாறுபட்ட கோணத்தில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து வழக்கு கடந்த மாதம் 24ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவிற்கு 2வாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தும் ஆணையம் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறது. மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ நிபுணர் குழு மட்டுமே ஆராய முடியுமே தவிர ஆணையத்தால் கண்டிப்பாக முடியாது. எங்களின் கருத்துப்படி ஆணையம் ஒருதலை பட்சமாகவும், தவறான எண்ணத்திலும் தான் செயல்படும் என முன்னதாகவே நினைத்து இருந்தோம். அதன்படியே தற்போது நிகழ்ந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.