ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நேற்று ஓய்வு பெற்ற நிலையில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவினர், பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி மாதம் ஒரு வாரக் காலங்களுக்கு மேலாகத் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசின் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டனர். இந்த ஜாக்டோ ஜியோ அமைப்பில் முக்கியமாக சொல்லக்கூடிய 10 நிர்வாகிகள் இருந்து வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானவர் சுப்பிரமணியன். ஜாக்டோ ஜியோ பல்வேறு போராட்டங்களை எல்லாம் முன்னின்று நடத்தியவர்.

தமிழக அரசுத் துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணிபுரிந்த மு.சுப்பிரமணியன்,  தமிழக அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவராகவும், ஜாக்டோ ஜியோ அமைப்பில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில் அவர் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், ஓய்வு பெறுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து, வரும் 3-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.