தமிழகத்தில் 10ம் வகுப்பு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நடைபெற இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கக் கூடும் என பல்வேறு தரப்பினரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது:

 ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் விரைவில் வெளியிட உள்ளார். இப்படி இருக்கும் நேரத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு குறித்து முழுமையான முடிவை மத்திய-மாநில அரசுகள் எடுக்காதபோது, அமைச்சரின் இந்த அறிவிப்பானது மிகவும் கண்டனத்துக்குரியது. நோய்த்தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகக்கூடிய சூழ்நிலையில் இல்லை. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து தேர்வு மையத்துக்கு மாணவர்கள் எவ்வாறு வருவார்கள் என்பது கேள்விக்குறி.

Demanding the postponement of the 10 public exam case...chennai high court Dismissed

பிள்ளைகளை தேர்வுக்கு அனுப்பக்கூடிய பெற்றோரும், தங்கள் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சத்திலேயே இருப்பார்கள். ஏற்கனவே பிளஸ்-2 பொதுத்தேர்வின் இறுதிநாள் தேர்வை சிலர் எழுத முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதுதவிர விடைத்தாள் திருத்தும் பணியானது வரும் 27-ந்தேதி தொடங்கும் என்ற அறிவிப்பும் ஆசிரியர் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஊரடங்கு நிறைவுபெற்று, நோய்த்தொற்றின் தீவிரம் குறைந்த பின்னர், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான உரியகால அவகாசத்தினையும், உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் வழங்கி பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். அதுவரை மாணவர்கள் நலன்கருதி, பொதுத்தேர்வு முடிவை ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.