சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மது போதையில் பெண் ஓட்டிவந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட கர்ப்பணி பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியைச் சேர்ந்தவர் கௌஷீப் (28). 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவரது கணவர் ரதி டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். கர்ப்பிணியாக உள்ள கௌஷீப் வழக்கம்போல் நேற்று மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றுவிட்டு, ஸ்கேன் ரிப்போர்ட்டை துணிக்கடைக்குச் சென்று கணவரிடம் காண்பித்துவிட்டு வீட்டு ரங்கதாஸ் காலனி மெயின் ரோடு வழியாக வீட்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவ்வழியே வந்த வருமானவரித் துறை போர்டு பொருத்திய கார் அதிவேகமாக வந்து கர்ப்பிணியின் பின்னால் பலமாக மோதியது. இதில் சிறிது தூரம் தூக்கி வீசப்பட்ட கௌஷீப், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை இயக்கிய பெண் அங்கிருந்து  கண் இமைக்கும் நேரத்தில் தப்பித்து சென்றுவிட்டார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த திருமங்கலம் போலீசார், கர்ப்பிணியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய காரில் வருமானவரித் துறை போர்டு உள்ள நிலையில், அது மத்திய அரசின் வாகனமா என்று விசாரித்து வருவதாக போலீசார் கூறுகின்றனர். மேலும், காரை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.