சென்னையில் காவல் ஆய்வாளரின் மகள் தனது பெற்றோர்கள் தன்னை பார் டான்ஸ் ஆட வைத்து பணம் சம்பாதிச்சாங்க என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோட்டூர்புரம் சிபிசிஐடி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் விஜயலட்சுமியின் மகள் கேண்டி, செய்தியாளர் சந்திப்பில் புகார் ஒன்றை கூறினார். அதில் என்னுடைய தாய் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். என்னடைய அம்மாவும், அப்பாவும் என்னை வற்புறுத்தி ஒரு வருட காலமாக துபாய் பாரில் ஆட வைத்து பணம் சம்பாதித்து வந்தனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறி, என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன்.

 

இந்நிலையில் கடந்த வாரம் எனது தாயும், தந்தையும் அடியாட்களுடன் வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து சென்றனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் இருந்து என்னை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதுமட்டுமல்லாமல் என்னுடைய அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். மேலும் என்னுடைய அண்ணியிடம் 10 லட்சம் பணமும், நகையும் வரதட்சணையாக வாங்கி தருமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர்களிடம் இருந்து என்னையும், எனது அண்ணனின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கதறியபடி செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார்.  பெண் போலீஸ் மீது அவரது மகளே புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.