தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை தவிர்க்க வருமான வரித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் குறித்து தெரிந்தால் மக்கள் தகவல் கொடுப்பதற்காக 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடை, தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகம், லலிதா ஜூவல்லரி உரிமையாளரின் வீடு ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள லலிதா ஜூவல்லரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத 175 ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு ஒப்பந்தரார்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த இரு  தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 175 ரூபாய் வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 3 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனைக் கடந்து ஏராளமான வரவு, செலவு குறித்த ஆவணங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து ஆவணங்கள் குறித்த விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், கணக்கில் வாராத தொகையின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமமுக உறவினரான முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.