இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்திருக்கும் நிலையில் 1886 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திரு.வி.க.நகரில் 448 பேருக்கும், ராயபுரத்தில் 442 பேருக்கும், தேனாம்பேட்டையில் 316 பேருக்கும், அண்ணா நகரில் 206 பேருக்கும், வளசரவாக்கத்தில் 205 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே போல தண்டையார்பேட்டையில் 184 பேர், அம்பத்தூரில் 144 பேர், அடையாறில் 107 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.  

திருவொற்றியூரில் 43 பேருக்கும், மாதவரத்தில் 33 பேருக்கும், பெருங்குடியில் 22 பேருக்கும், ஆலந்தூரில் 16 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சோழிங்கநல்லூரில் 15 பேரும், மணலியில் 14 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றனர். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது.