இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 527 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில் நேற்று 508 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,537 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி 1485 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 34 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு தொற்று உறுதியாகி 2008 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிற மாவட்டங்களிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி வாங்கி வேளச்சேரியில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்து வந்த வியாபாரிக்கும் அவரது மகனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமை சிகிச்சையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்ததில் வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனிடையே அவர்கள் வசித்து வந்த தெரு முற்றிலும் முடக்கப்பட்டு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி பணி நடந்து வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.