சட்ட விரோத மணல் சுரங்கங்களை நடத்துவது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ மற்றும் தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பல்வேறு மாநிலங்களில் பரவலாக சட்ட விரோதமாக மணல் சுரங்கங்கள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘மணல் சுரங்க முறைகேடு குறித்து சிபிஐ வழக்கு பதிந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்ஏ பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், பிரனாவ் சச்தேவா ஆஜராகினர். அப்போது அவர்கள், ‘‘மாநிலங்களில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மணல் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன,’’ என்று வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘தமிழ்நாடு, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மேலும், மத்திய அரசு மற்றும் சிபிஐ ஆகியவையும் இதற்கு பதிலளிக்க வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.