இந்தியாவில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1899 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். 

ஆனால் மருந்து கண்டுபிடிக்கும் வரை, இப்போதைக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் பிளாஸ்மா தெரபி. பிளாஸ்மா தெரபி மூலம் டெல்லியில் சிலர் குணமடைந்துள்ளதால், பிளாஸ்மா தெரபி முறை பலனளிப்பதால் அதை பின்பற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதியளித்துள்ளது. 

பிளாஸ்மா என்பது குருதி அணுக்களை ஏந்திச்செல்லும் நிறமற்ற திரவம். பிளாஸ்மா தெரபி சிகிச்சையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தவரின் ரத்தத்திலிருந்து ஆண்டிபாடிகளை பயன்படுத்தி கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், இரத்த அணுக்களும் அதிகரிக்கிறது. அதனால் கொரோனா வைரஸை எதிர்த்து போராட உடல் தயாராகிறது. 

இந்த பிளாஸ்மா தெரபி சிகிச்சை இந்தியாவில் ஏற்கனவே டெல்லி, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் செய்யப்பட்டுவரும் நிலையில், இந்தியா முழுவதும் 21 மருத்துவமனைகளில் பிளாஸ்மா தெரபி சிகிச்சையளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதியளித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். 

அந்த 21 மருத்துவமனைகளில் தமிழ்நாட்டில் 4 மருத்துவமனைகளும் அடக்கம். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சையளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.