நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு அவர்கள் விரும்பிய இடத்தில் வாடகையின்றி வீடு ஒதுக்கி தரப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

ஆர்.நல்லகண்ணுவுக்கு 2007ம் ஆண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த குடியிருப்பு கட்டிடங்கள் பழமையானதால், புதிய அடுக்குமாடி வீடு கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. 2011ல் குடியிருப்பை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மொத்தம் உள்ள 119 குடியிருப்புகளில் இதுவரை 96 குடியிருப்புதாரர்கள் வீடுகளை வாரியத்திடம் ஒப்படைத்துள்ளனர். 10.5.2019ம் தேதி நல்லகண்ணு தாமாகவே முன் வந்து வீட்டை காலி செய்துள்ளார். ஆனால் இதுநாள் வரை முறையாக வாரியத்திடம் ஒப்படைப்பு செய்யவில்லை. மறைந்த கக்கன் குடும்பத்தினரும் இதுவரை குடியிருப்பினை ஒப்படைக்கவில்லை.

நல்லகண்ணு மற்றும் பெரியவர் கக்கன் வீட்டை பொறுத்தவரையில், அவர்களை கட்டாயப்படுத்தி காலி செய்ததாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்த இரு மாபெரும் தலைவர்களுக்கு, அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், அவர்கள் விரும்பிய இடத்தில் வாடகையின்றி வீடு ஒதுக்கி தரப்படும் என்றார்.