சென்னை திருவொற்றியூர் மீனவ கிராமத்தில் குடிநீர் பிரச்னையால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குடிசைவாசிகள் என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் மண்டலம் 9வது வார்டில் உள்ள திருவொற்றியூர் குப்பம், பட்டினத்தார் கோயில் குப்பம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர்.

இங்குள்ள மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இங்கு அமைக்கப்பட்டுள்ள தெரு குழாய்களில் குடிநீர் சரியாக வருவதில்லை. வாரத்துக்கு 3 நாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் சுமார் 45 நிமிடம் மட்டுமே குழாய்களில் தண்ணீர் வருகிறது.

இதனால் காலி குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள், தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். குடிநீர் கிடைக்காமல் இங்குள்ள மீனவ மக்கள், பல்வேறு பகுதிகளுக்கு சென்று பெரும் அவதியுடன் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர்.

திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள உயர் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து, சுமார் 2 கிமீ தூரத்தில் திருவொற்றியூர் குப்பம் மற்றும் பட்டினத்தார் கோயில் குப்பம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளது.

இதற்கு இடையே உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், குடிநீருக்கான வீட்டு இணைப்பு பெற்றிருப்பதால், மேற்கண்ட பகுதிக்கு வரும் குடிநீர், இங்குள்ள குடியிருப்பில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் பிடித்து விடுகின்றனர்.

இதையொட்டி பொதுக் குழாயை நம்பியுள்ள திருவொற்றியூர் குப்பம் மற்றும் பட்டினத்தார் கோயில் குப்பத்து மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கிடைப்பது குறைகிறது. 10 குடம் தண்ணீர் வருவதே பெரிய விஷயமாக உள்ளது என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தெரு குழாயை நம்பியுள்ள இப்பகுதி மீனவ மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்க, பிரதான குழாய்களில் வால்வு அமைத்து சுழற்சி முறையில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என திருவொற்றியூர் மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து மேற்கண்ட மீனவ மக்கள் கூறியதாவது, இந்த பகுதியில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் முறையாகவும், தரமாகவும் அமைக்கவில்லை. பல இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யாமல் அப்படியே குழாய்களில் குடிநீர் விநியோகிப்பதால், வேகம் குறைந்து வருகிறது.

4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி, குடிநீர் குழாயில் தண்ணீரை பிடிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் குடிசையில் வசிப்பதால், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தடையில்லாமல் குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.