பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை அங்குள்ள வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைகின்றனர். இதனை போலீசாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே, நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

 தாம்பரத்தில் இருந்து சென்னையின் முக்கிய இடங்களான சென்ட்ரல், எழும்பூர், பிராட்வே, கோயம்பேடு, தி.நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையே மிக முக்கிய சாலையாக உள்ளது.

மேலும், பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக துரைப்பாக்கம், பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளுக்கு, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் எளிதில் சென்று வரும் வகையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் பல்லாவரம் மேம்பாலம் பல கோடி செலவில் கட்டப்பட்டது.

தற்போது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் இந்த மேம்பாலங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பலமணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காத்து கிடக்காமல் செல்ல வேண்டிய இடங்களுக்கு எளிதில் சென்று வருகின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பல்லாவரம் மேம்பாலத்தின் காலியாக உள்ள கீழ் பகுதியை சில தனியார் வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்து, பிளாஸ்டிக் பேரல் உள்ளிட்ட பொருட்களை வைக்கும் குடோனாக மாற்றி வருகின்றனர்.

இவ்வாறு தனி நபர்கள் சுய லாபத்திற்காக ஆக்கிரமித்துள்ளதால் அரசின் சார்பில் பல கோடி செலவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பல்லாவரம் மேம்பாலத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக் குறியாக மாறி உள்ளது. பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் புதிய பாலம் கட்டும் பணிகள் வேறு நடைபெற்று வருவதால் பிரதான சாலைகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்படுகின்றன.

இதனால் வழக்கத்தை விட பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே உள்ளது. இந்த நிலையில் பல்லாவரம் மேம்பாலத்தின் கீழ் ஆக்கிரமித்துள்ள வியாபாரிகள், தங்களது விற்பனை பொருட்களை ஜிஎஸ்டி சாலையிலேயே லாரிகளில் ஏற்றி இறக்குகின்றனர்.

இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், லாரிகளில் ஏற்றப்படும் பொருட்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது தவறி விழுந்து சிறுசிறு விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதுடன், அவ்வாறு மேம்பாலத்தை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்துள்ள வியாபாரிகளிடம் இருந்து மாதந்தோறும் ஒரு தொகையை கமிஷனாக பெற்று செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் பாலத்தின் அடியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இ-டாய்லெட்டுகளையும் விட்டு வைக்காமல் வியாபாரிகள், தங்களது பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் கழிவறைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாலத்தின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இனியும் தாமதிக்காமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புக்குள்ளான பல்லாவரம் மேம்பாலத்தை உடனடியாக மீட்பதுடன், மீண்டும் தனிநபர்கள் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாதபடி தடுப்பு வேலிகள் அமைத்து மேம்பாலத்தை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.