தமிழகத்தில் வெப்ப சலனம் நீடிப்பதை அடுத்து 16 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து நீடித்த வெயில் காரணமாக வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

ஆனாலும், தமிழகத்தில் சில இடங்களில் வெயில் நீடித்து வருகிறது. இந்த வெப்ப காரணமாக ஏற்பட்ட வெப்ப சலனத்தால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகம், சேலம் 50மிமீ, சங்கராபுரம், சோழவரம், சென்னை 40மிமீ, அண்ணா பல்கலைக் கழகம், செங்குன்றம், ஏற்காடு, வால்பாறை, தாமரைப்பாக்கம், சின்னகல்லார், மாதவரம் 30மிமீ, கோபிசெட்டிப் பாளையம், உத்ரேமேரூர் 20 மிமீ மழை பெய்துள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் நேற்று இரண்டு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரை 102 டிகிரி இருந்தது. இதனால் மேலும் வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், நீலகிரி, கோவை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், விருதுநகர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.