தமிழக கடலோரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29ல் வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 3 செமீ மழை பெய்துள்ளது. பூண்டி, சத்தியபாமா பல்கலைக்கழகம் பகுதியில் தலா 2 செமீ, சென்னை டிஜிபி ஆபீஸ், திருவள்ளூரில் தலா ஒரு செமீ மழை பதிவாகி உள்ளது.