சென்னையில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 16 ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் இருக்கும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தநிலையில் வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் உருவான புயல்கள் நகர்ந்து சென்றதால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் தீவிரம் வெகுவாக குறைந்தது. புயல்கள் கரையை கடந்த பிறகு மீண்டும் தமிழகத்திற்கு மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடந்த 18 ம் தேதி உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பசலனத்தால் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் பெரும்பலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, கோயம்பேடு, குரோம்பேட்டை உட்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி தற்போது போக்குவரத்து நெரிசல் உண்டாகியுள்ளது. பள்ளி,கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து செல்லும் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.