தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனிடையே தென்மேற்கு பருவ காலம் நிறைவடைந்து இன்றிலிருந்து வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும்போது, தமிழகத்தின் தென்மேற்கு வாங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மீனவர்கள் யாரும் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் இடைவெளி விட்டுவிட்டு மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூவிருந்தமல்லியில் 13 செ.மீ. மழையும், பாம்பனில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

இவ்வாறு வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.