தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சென்னை, வேலுார், திருத்தணி உள்பட 11 நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டியது. குறிப்பாக வேலுாரில் இன்று வெயில் கொளுத்தியெடுத்தது. வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், ஆகவே பொதுமக்கள் அடுத்த 3 நாட்கள் காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மே 19,20ம் தேதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்கும் சூழல் கனியக்கூடும் என முன்பு கணிக்கப்பட்டது. 

ஆனால், அடுத்த மூன்று நாட்களுக்குப் பின்னரே அது பற்றி தெரியவரும் என வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியுள்ளது. பொதுவாக, தென்மேற்கு பருவமழை மே இறுதி வாரத்தில் துவங்கும். ஆனால் இம்முறை மழை துவங்க ஜுன் 6ம் தேதி வரை ஆகலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.