இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் 600 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,009 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்றைய நிலவரப்படி 1,605 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளராக கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வந்த 45 வயது ஊழியர் ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக இன்று காலையில் சென்னையைச் சேர்ந்த இரு பெண்கள் மரணமடைந்தனர். இதன்மூலம் தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 3 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 399 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை தலைநகரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3,043 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 27 பேர் கொரோனாவிற்கு பலியாகி இருக்கும் நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.