பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி வழங்கினார்.

பூந்தமல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து, வாழ்வளிக்கும் பொருட்டு, சிறப்பு நேர்வாக விதிகளை தளர்வு செய்து, புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த ஆண்டின் முதுநிலை வரிசைப்படி எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் மூலமாக அரசு அச்சகங்களில் 7 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு `இளநிலை புத்தகம் கட்டுநர்' பதவியில் பணி நியமனம் வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பூந்தமல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த 7 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியின்போது, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமை செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) கார்த்திக், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர் தண்டபாணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 14 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.