ஈரோடு மாவட்டம் தாராபுரம் அலங்கியம் ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மாத்திரைகள் 2 மூட்டைகளில் வீசப்பட்டு கிடந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் தாராபுரம் அலங்கியம் ஆற்றுப்பாலம் பகுதியில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று காலை 2 மூட்டைகள் கிடந்தன. அதை பார்த்ததும், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். பின்னர், அந்த மூட்டைகைளை பிரித்து பார்த்தபோது, அதில், அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மாத்திரைகள் என தெரிந்தது.

தகவலறிந்து வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அங்கு கிடந்த 80 சதவீத மாத்திரைகள் காலாவதியாகாத உயிர்காக்கும் மாத்திரைகள் என தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனடியாக சப் கலெக்டர் பவன்குமாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

இதைதொடர்ந்து, சுடுகாட்டில் வீசப்பட்ட அரசு மாத்திரைகள் எந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டவை, சிகிச்சைக்காக வழங்கப்பட்ட அரசு மாத்திரைகளை, அனுமதியின்றி வெளியில் எடுத்துவந்து, குப்பையில் வீசியது யார் என விசாரிக்க சப் கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், கைப்பற்றப்பட்ட அனைத்து மாத்திரைகளையும், அலங்கியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்கும்படி அதிகாரிகளுக்கு சப்- கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி வருவாய்துறை அதிகாரிகள் மாத்திரைகளை அலங்கியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். விலை உயர்ந்த அரசு மாத்திரைகள் குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.