கொரோனா பீதியால் ஏ.டி.எம் -ல் ஒரு நபர் பயன்படுத்திய பிறகு, உடனே கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரகள் தரப்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மே 3ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் தொழில்நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், ஒருசில நிறுவனங்கள் ஊரடங்கு காலத்திலும் அரசு அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மே 3ம் தேதி முதல் ஒருசில தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அவசர செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சென்னை மாநகராட்சி பகுதியில் அரசு, தனியார் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் தினமும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.  கிருமிநாசினி தெளிக்காத அலுவலகங்கள் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், ஏடிஎம் மையங்களில் ஒரு நபர் பயன்படுத்திய பிறகு, உடனடியாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிக்கு வரும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் மற்றும் அவ்வப்பொழுது கிருமி நாசினி அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவுதல் ஆகியவற்றை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது தொற்றுநோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.