Asianet News TamilAsianet News Tamil

சிகிச்சைக்காக வருபவர்களுக்கே நோய் தொற்று ஏற்படும் அபாயம் – வேப்பூர் அரசு மருத்துவமனையில் அவலம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

government hospital problem
Author
Chennai, First Published Jun 20, 2019, 12:43 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், சிகிச்சைக்காக வரும் மக்களுக்கு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வேப்பூரில் செயல்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டு, வேப்பூர் வட்டார பகுதி கிராமங்களுக்கு அரசு பொது மருத்துவமனையாக இயங்குகிறது.

இங்கு வேப்பூர், புதுவேட்டக்குடி, நன்னை, சாத்தநத்தம், கல்லை, ஒலைப்பாடி, வயலப்பாடி, பரவாய், கல்லம்புதூர் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.

தற்போது இந்த மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எம்டி. பட்டம் பெற்ற டாக்டர், பொது நல டாக்டர், மகளிர் சிறப்பு டாக்டர் என 3 பேர் மட்டும் உள்ளனர். ஏற்கனவே இங்கிருந்த பல் டாக்டர் மேல் படிப்புக்காக சென்று விட்டார். 9 டாக்டர்கள் இருந்த மருத்துவமனையில், தற்போது 3 பேர் மட்டுமே உள்ளனர்.

இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் அங்கு பணி புரியும் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. பணிக்கு வரும் டாக்டர்கள், சில நாட்கள் மீட்டிங் இருக்கிறது என கூறிவிட்டு, சிறிது நேரத்திலேயே அங்கிருந்து சென்று விடுகின்றனர்.

பல நாட்கள் 2 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர். தினமும் 40க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். பிரசவ காலத்தில் பிரசவம் பார்க்க அனைத்து உபகரணங்கள் இருந்தும், டாக்டர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனையை பொதுமக்கள் நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அடிதடி, விபத்து உள்பட பல்வேறு சம்பவங்களால், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு, எக்ஸ்ரே எடுக்க உபகரணங்கள் இருந்தும், ஊழியர்கள் இல்லை. இதனால், அந்த சாதனங்கள் பயனில்லாமல் காட்சி பொருளாக கிடக்கின்றன. இதையொட்டி, நோயாளிகளை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலை உள்ளது.

இரவு நேரம் மற்றும் அவசர நிலைக்கு 30 கிமீ தூரம் உள்ள பெரம்பலூர், அரியலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது சில உயிரழப்பு சம்பவங்கள் நடக்கின்றன.

பணிக்கு வரும் டாக்டர்கள் காலை 8 மணிக்கு வந்தால் மாலை வீட்டுக்கு செல்ல வேண்டும். ஆனால் இங்கு மதியமே டாக்டர்கள் சென்று விடுகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதன் பின்னர் வரும் நோயாளிகள் டாக்டர்கள் இல்லாமல் சிகிச்சை பெற முடியாமல் கடும் சிரமம் அடைகின்றனர்.

மருத்துவமனையில் கழிப்பறையை சரிவர சுத்தம் செய்யாததால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது உத்தரவு. ஆனால், இரவு நேரங்களில் செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

வேப்பூர் கிராம மக்கள் உடனடியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கண்டன போஸ்டர்களையும் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் வேப்பூரில் அரசு மருத்துவமனையை உடனடியாக ஆய்வு செய்து, போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். பயனற்று கிடக்கும் மருத்துவ உபகரணங்களை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios