நல்ல சாலை வசதி வேண்டுமானால், பொதுமக்கள் முறையாக சுங்க வரியை செலுத்த வேண்டும்,’’ என்று மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தொடர்பான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய சில உறுப்பினர்கள், நாட்டின் பல பகுதியில் சாலைகளில் சுங்கவரி வசூலிப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தனர்.

விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு 40 ஆயிரம் கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது. சுங்கவரி வசூலிப்பது ஒருபோதும் முடிவுக்கு வராது.

ஆனால், சுங்க வரியாக வசூலிக்கப்படும் தொகை நேரத்துக்கு நேரம் வித்தியாசப்படும். நீங்கள் நல்ல சாலை வேண்டும் என்று நினைத்தால், சுங்கவரி செலுத்துவது மிக அவசியமான ஒன்று என்பது புரியும். அரசிடம் பணம் இல்லை என்பதால், இந்த வரியை செலுத்துவது மிக அவசியமானது.

சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, இதற்கு மாநில அரசுகள் உதவுவதுடன் நிலம் கையப்படுத்தும் பணிக்கும் உதவ வேண்டும். நில கையகப்படுத்தும் பணி நிறைவடையாவிட்டால் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்வது மிக கடினம்.

குறிப்பாக, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் சாலைப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றபோது ரூ.3.85 லட்சம் கோடி திட்ட மதிப்புள்ள 400 பணிகள் முடங்கி கிடந்தன.

இதில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடிக்கான பணியை பாஜ அரசு தொடங்கியுள்ளது. எங்கள் அமைச்சகம், புதிய பசுமை வழிசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மிகவும் பின்தங்கிய பகுதி வழியாக செல்லும் இந்த சாலைகள் மூலம், டெல்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் செல்ல முடியும். இதன் மூலம், 16 ஆயிரம் கோடிக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி மிச்சமாகி உள்ளது என்றார்.