மேற்கு வங்கத்தில் இளம்பெண் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள தங்கம், செப்பு, பித்தளை நகைகள், 90 நாணயங்கள் எடுக்கப்பட்டன.

மேற்கு வங்கத்தில் உள்ள பிர்பும் மாவட்டத்துக்கு உட்பட்ட மார்கிராம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் (26) ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். சில மாதங்களாக வீட்டில் இருந்த கம்மல், வளையல், மூக்குத்தி உள்ளிட்ட தங்கம், செப்பு மற்றும் பித்தளையால் ஆன நகைகள் திடீர் திடீரென காணாமல் போயின.

இதனால், வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த யாரும் நகைகளை எடுக்கவில்லை என்பது உறுதியானது. இதனால், மனநிலை பாதித்த பெண்ணின் மீது சந்தேகம் எழுந்தது. அவரின் நடவடிக்கைகளை குடும்பத்தினர் ரகசியமாக கண்காணித்தனர்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவர்களிடம் அவரை அழைத்து சென்றனர். எனினும், யாராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இறுதியாக, பிர்பும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில், அந்த பெண்ணின் வயிற்றில் ஏராளமான பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது, வயிற்றில் இருந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய வயிற்றில் ரூ.5, ரூ.10 மதிப்புள்ள 90 நாணயங்களும், செயின், கம்மல், மூக்குத்தி, வளையல், கொலுசு, வாட்ச் உள்ளிடட பொருட்களும் இருந்தன. இவற்றின் மொத்த எடை ஒன்றரை கிலோ, வயிற்றில் இருந்த நகைகளில் பெரும்பாலானவை செப்பு, பித்தளை நகைகள், மருத்துவர்கள் அவற்றை அகற்றினர். அண்ணனின் கடையில் இருந்தபோது, இப்பொருட்களை அப்பெண் விழுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.