சென்னை தாம்பரம் அருகே பெட்ரோல் பங்கில் கஞ்சா போதை கும்பல் பட்டாக்கத்திகள், வீச்சரிவாள்களுடன்  நடத்திய கொலைவெறி தாக்குதலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

தாம்பரம் அருகே ஆலப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பது தொடர்பாக இரு கும்பல் இடையே மோதல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு கும்பலானது, மற்றொரு கும்பலைச் சேர்ந்த இளவரசன் என்ற நபரைத் தேடி பட்டாக் கத்திகள், வீச்சரிவாள்களுடன் கஞ்சா போதையில் ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு நேற்று மாலை சென்றதாகக் கூறப்படுகிறது. 

தேடிச்சென்ற நபர் கிடைக்காத ஆத்திரத்தில், அந்தக் கும்பல் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்க் ஊழியர்களைத் தாக்கியது. இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அவர்கள் வருவதை அறிந்து தப்பிச் சென்ற ரவுடிகள், போலீஸ் திரும்பிச் சென்ற பிறகு மீண்டும் அந்த பெட்ரோல் பங்க் சென்று வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசுக்கு தகவல் சொன்னது யார் எனக் கேட்டு, பெட்ரோல் நிரப்ப வந்தவர்களை பட்டாக்கத்திகளாலும், விபத்து கால கூம்பு வடிவ பிரதிபலிப்பான்களாலும் தாக்கியுள்ளனர். இதில் 7 பேருக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. 3 பேருக்கு வெட்டு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

கஞ்சா போதையில் இருந்த ரவுடிக் கும்பலின் அட்டூழியத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரவுடிகளின் அட்டகாசத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.