Asianet News TamilAsianet News Tamil

ஃபாக்ஸ்கான் சென்னை அலுவலகத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை கிடையாதா?

திருமணமான பெண்கள் ஓரங்கட்டப்படுவது குறித்த புகார் குறித்து ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு அரசு தரப்பிலும் உடனடியான பதில் வெளியிடப்படவில்லை.

Foxconn Doesn't Hire Married Women At Chennai Plant? Centre Seeks Report sgb
Author
First Published Jun 26, 2024, 11:37 PM IST

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில் திருமணமான பெண்கள் வேலையில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு புதன்கிழமை அறிவுறுத்தி இருக்கிறது.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், 1976ஆம் ஆண்டின் சம ஊதியச் சட்டத்தை மேற்கோள் காட்டி, "ஆண்கள் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்த பாகுபாடும் இருக்கக் செய்யக்கூடாது என்று சட்டம் தெளிவாகக் கூறுகிறது" எனத் தெரிவித்துள்ளது.

திருமணமான பெண்களை வேலையிலிருந்து விலக்கும் ஃபாக்ஸ்கானின் நடவடிக்கை பற்றி தகவல் வெளியானதை அடுத்து, தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையிடம் இருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளதாகவும் அமைச்சகம் கூறியது. உண்மை நிலை அறிக்கையை வழங்குமாறு பிராந்திய தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கும் உத்தரவிட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருமணமான பெண்கள் ஓரங்கட்டப்படுவது குறித்த புகார் குறித்து ஆப்பிள் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு அரசு தரப்பிலும் உடனடியான பதில் வெளியிடப்படவில்லை.

செவ்வாயன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகில் உள்ள அதன் முக்கிய ஐபோன் ஆலையில் திருமணமான பெண்களை வேலையில் இருந்து திட்டமிட்டு விலக்கி வைத்துள்ளது, திருமணமாகாத சகாக்களை விட அவர்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகம் என்ற அடிப்படையில் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஆள் சேர்ப்பு முகவர்கள் மற்றும் மனிதவளப் பிரிவு நிர்வாகிகளிடம் நடத்திய நேர்காணல் மூலம் இதனைக் கண்டறிந்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. குடும்ப கடமைகள், கர்ப்பம் மற்றும் அதிக வேலையில்லாமை ஆகியவை ஃபாக்ஸ்கான் ஆலையில் திருமணமான பெண்களை வேலைக்கு அமர்த்தாததற்குக் காரணங்களாகக் குறிப்பிடுகின்றன என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை கூறுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios