இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2,176 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் பணியில் ஈடுபட்டு வரும் 4 தாசில்தார்களும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டிருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இரவு, பகல் பாராமல் செயல்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் இருக்கும் அரசு அதிகாரிகள், காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்றோருக்கு தொற்று ஏற்படுவது அண்மையில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் 4 தாசில்தார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. சென்னை ஆட்சியர் அலுவகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பு மையத்தில் சுழற்சி முறையில் பணிபுரிந்து வந்த  இரண்டு பெண் தாசில்தார்கள் உட்பட மூவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பரிசோதனைகள் நடந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த இரண்டு தாசில்தார்கள், இரண்டு வருவாய் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.