முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. சொந்த ஜாமினில் விடுவித்த நீதிமன்றம்.. என்ன நடந்தது?
பீலா வெங்கடேசன் புகாரில் கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை சொந்த ஜாமினில் விடுவித்தது திருப்போரூர் நீதிமன்றம்.
தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது. மேலும் இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனையடுத்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ராஜேஷ் தாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.
பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா பிரிந்தார். அதுமட்டுமின்றி பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார். ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பங்களா வீடு வாங்கினார்கள்.
தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது என்று கூறப்படுகிறது. பிறகு ராஜேஷ் தாஸ் கடந்த 18-ம் தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார்.
ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிறகு முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாஸை இன்று கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பை தாராததால் அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறி அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் சட்டப்பிரிவு 353 கீழ் ராஜேஷ் தாஸ் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, திருப்போரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தின் உள்ளே செல்லும்போது இயல்பாக இருந்தார் ராஜேஷ் தாஸ். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிறகு இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார் ராஜேஷ் தாஸ். தனக்கு மிகவும் உடல் சோர்வாக உள்ளதாக கூறிய நிலையில் சொந்த ஜாமீனில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை விடுவித்துள்ளது திருப்போரூர் நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..