செக் மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இரா. அன்பரசு மற்றும் மணி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் கடந்த 2002ல் ரூ.35 லட்சத்தை ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை கடனாக பெற்றது. அதன் நிர்வாகிகளான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு, அவரது மனைவி கமலா மற்றும் அறக்கட்டளையை சேர்ந்த மணி ஆகியோர் கையெழுத்திட்ட காசோலைகளை கடனை திரும்ப செலுத்துவதற்காக வழங்கியுள்ளனர்.

அந்த காசோலைகளை போத்ரா வங்கியில் செலுத்தியபோது அறக்கட்டளை கணக்கில் பணமில்லாமல் திரும்பிவந்தது. இதையடுத்து, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் உள்ள சென்னை மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் அறக்கட்டளை மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராக முகுந்த்சந்த் போத்ரா காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அன்பரசு, அவரது மனைவி கமலா மற்றும் மணி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2015ல் தீர்ப்பளித்தது. மேலும், அறக்கட்டளை நிர்வாகிகள் 8 பேர் சேர்ந்து ரூ. 35 லட்சத்தை போத்ராவுக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மூவரும் மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விரைவு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. வழக்கு நிலுவையில் இருந்தபோது கமலா இறந்துவிட்டதால் அவர் மீதான தண்டனை கைவிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை அமர்வு நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி அறக்கட்டளை மற்றும் இரா.அன்பரசு, மணி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அன்பரசு உள்ளிட்ட 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன், தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

மேலும், தண்டனையை உடனடியாக அமல்படுத்தும் வகையில் இருவரையும் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.