நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விமர்சித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் நீதிபதி கர்ணன். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் விமர்சித்து கர்ணன் பேசியிருந்த வீடியோயூ-டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. எனவே, நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் தேவிகா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாகவும் புகாரளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் சென்னை ஆவடியில் உள்ள வீட்டில் வைத்து முன்னாள் நீதிபதி கர்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2-ம் தேதி காலையில் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.  பின்னர், அவரை பரிசோதனை செய்ததில் நுரையீரலில் கொரோனா அறிகுறி இருந்தது. இதனால் ஆர்.டி.பி.சி.ஆர். கருவி வாயிலாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.