மீன்பிடி தடைக்காலம் 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். 

ஆண்டுதோறும் மீன்களின் இனவிருத்தியை அதிகரிக்கும் நோக்கத்தோடு மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடை காலத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. முதலில் 45 நாட்களாக இருந்த தடைக்காலம் கடந்த 2 ஆண்டுகளாக 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்தது. இதனையடுத்து தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை உள்ளிட்ட கலையோர பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

இந்த தடை காலத்தில், ஆழ்கடல் மீன் பிடிக்க செல்லும் இயந்திர படகுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதால், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாது. எனவே, மீன்களின் விலையும் வழக்கம் போல் அதிகரித்திருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் தடைகாலம் நிறைவடைகிறது. எனவே, நாகை, வேதாரண்யம், தேவிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதி தமிழக மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் ஏற்பாடுகளில் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதனால் நாளை முதல் மீன்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.