வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையம் அருகே கடந்த 2004ம் ஆண்டு ரயில்வே துறைக்கு தமிழக அரசு ஒதுக்கிய 18 சென்ட் இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து மீன் மார்க்கெட், டீக்கடைகள் மற்றும் பிரியாணி கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.

இந்நிலையில் அதே நபர் அந்த இடத்தை தனக்கு சொந்தமாக்க வேண்டும் என போலி சர்வே நம்பரை வைத்து வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5ம் தேதி அந்த இடத்தை காலி செய்யுமாறு வருவாய்த் துறையினர் மற்றும் ரயில்வே துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால் மேற்கூரையை மட்டும் அகற்றிவிட்டு அதே இடத்தில் மீன் வியாபாரம் செய்து வந்தனர். நேற்று வேளச்சேரி வருவாய் துறையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் வந்து அந்த இடத்தை காலி செய்யுமாறு கூறினர். பின்னர் அவர்கள் காலி செய்தவுடன் அந்த இடத்தில் இருந்த கட்டுமான பணிகளை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்து அகற்றினர்.

அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக வேளச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள காவல் நிலையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 50க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ₹10 கோடி மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த மாதம் இதன் அருகில் 1.15 ஏக்கர் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள், விடுதிகள் என 400 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.