சென்னை டுமீல் குப்பத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமானது. 

சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ள டுமீல் குப்பத்தில் கடற்கரையோரம் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. அங்கு வசித்து வரும் மக்கள் அனைவரும் காற்றோட்டத்திற்காக இரவில் அருகில் உள்ள கடற்கரையில் உறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஒரு குடிசை வீட்டில் பற்றி தீ மளமளவென அருகில் இருந்த அனைத்து குடிசைகளுக்கும் பரவியது. 

இது தொடர்பாக உடனே தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த பொருட்களும் அனைத்தும் தீயில் கருகியது. 

மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் படுக்காமல் கடற்கரையில் படுத்து இருந்ததால், பெரும் உயிர்தேசம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவே காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.