சென்னையில் ஃப்ரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்ட கொலையா? அல்லது ஃப்ரிட்ஜ் வெடித்துதான் உயிரிழந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னை தாம்பரம் அருகே உள்ள பகுதி சேலையூர் அருகே  அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் பிரசன்னா. இவர் நியூஸ் ஜெ. தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்ததில் பிரசன்னா, அவரது தாயார், மனைவி ஆகிய 3 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், வீட்டில் இருந்து அதிகப்படியாக புகை வெளியேறியதை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனே தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர், உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஃப்ரிட்ஜ் வெடித்து புகை சூழ்ந்ததால் அவர்கள் 3 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறியுள்ளனர். மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் தீ எப்படி பற்றியது என்பது தொடர்பாக தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மின்சார இஞ்சினியர்களிடம் விசாரித்த போது என்னதான் உயரழுத்த மின்சாரம் என்றாலும் ஏ.சி.யோ ஃப்ரிட்ஜோ வெடிக்காது என்கிறார்கள். இதனால். இது திட்டமிட்ட கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.