ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், டெல்டா  மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தமிழக  அனைத்து விவசாயிகள்  ஒருங்கிணைப்புக்குழு சார்பில் டெல்லியில் நாடாளுமன்றம்  முன் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தை புதுச்சேரி  முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில்தான் அதிக அளவு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 373 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு, வேதாந்தா நிறுவனத்துக்கும், ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி. ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

அதேநேரத்தில் தமிழக அரசு சார்பில், `நாங்கள் ஹைட்ரோகார்பனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அனுமதியின்றி திட்டம் தொடங்கப்பட்டால் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

எனினும் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் முதல்கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுங்கள் என விவசாயிகள் சங்கம் போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேவேளையில் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடும் விவசாயிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக மக்களின் முக்கிய பிரச்னையான ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி டெல்லி நாடாளுமன்றம் முன் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, தமிழகம், புதுவை மாநிலங்களில் விவசாய நிலங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே உள்ள ஜந்தர்மந்தரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, காலை 10 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து வாழ்த்தினார். நாகை மாவட்ட விவசாய சங்க செயலாளர் தரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட சுமார் 250 பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். டெல்லி வாழ் தமிழர்கள், தமிழ் சங்க பொறுப்பாளர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். தமிழகம், புதுச்சேரி எம்.பிக்களும் உண்ணாவிரத பந்தலுக்கு வந்து வாழ்த்தினர். மாலையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட விவசாயிகள், இன்று (ெவள்ளி) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகிறார்கள்.

இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ``டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டம்தான் ஹைட்ரோகார்பன். இந்த திட்டம் அமல் செய்யப்பட்டால் விவசாயம் அழிந்து மக்கள் டெல்டா மாவட்டங்களை விட்டு வெளியேறும் ஆபத்து உள்ளது. அதை தடுத்து நிறுத்த அனைத்து கட்சி ஆதரவையும் கோரியும், மத்திய அரசை வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளோம். இதே கோரிக்கைக்காக நாளை (இன்று) நாடாளுமன்ற முற்றுகை போராட்டமும் நடக்கும் என்றார்.