சென்னையில் மெரினா கடற்கரையில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த ரசிர்கள் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த ரசிர்கள் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பெரிய திரையில் போட்டியைக் காண வந்திருந்த நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக போட்டியைக் கண்டு ரசித்தனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவரிகளில் 241 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது. 241 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 42.3 ஓவர்களிலே 4 விக்கெடுகளை மட்டும் இழந்து 244 ரன் எடுத்து வெற்றி வாகை சூடியது.

நட்சத்திர வீரர் விராட் கோலி 111 பந்துகளில் தனது 51வது சதத்தை பதிவு செய்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பொறுப்புடன் ஆடிய கோலி ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியில் ஒருநாள் போட்டி அரங்கில் 14,000 ரன்களைக் கடந்தது உள்பட பல சாதனைகளையும் நிகழ்த்தினார்.

விராட் கோலி புதிய சாதனை! அதிவேகமாக 14,000 ரன்களைக் கடந்து அசத்தல்!

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் பெரிய திரையில் இப்போட்டியைக் கண்டு ரசித்தவர்கள் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சதமடித்த விராட் கோலி, அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன் ரோஹித் இருவரின் பெயரையும் சொல்லி கத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு அரசின் சென்னை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பெரிய எல்இடி திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த சிறப்பு ஏற்பாட்டை கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்று தொடர்ந்து இதுபோல நடைபெற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தனர்.

பாகிஸ்தானை வேரோடு சாய்த்த இந்திய அணி! 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!