கல்பாக்கம் அருகே, பண்ணை வீட்டில் ரகசியமாக மதுபான தொழிற்சாலை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது ெசய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்த கீழார் கொல்லை பகுதியில், ஒரு பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் சாராயம் கொண்டு வந்து மதுபானம் தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின்பேரில், மத்திய புலனாய்வு பிரிவு விழுப்புரம் சரக ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் எஸ்.ஐ அழகிரி மற்றும் புலனாய்வு பிரிவினர் நேற்று அந்த பண்ணை வீட்டிற்கு திடீர் சோதனை செய்தனர்.      

இந்த சோதனையில், 35 லிட்டர் கொள்ளளவுக் கொண்ட 50 சாராய கேன்கள் மற்றும் 10 ஆயிரம் பாட்டில் மூடிகள், 50 தண்ணீர் கேன்கள், போலி ஸ்டிக்கர் பண்டல்கள், மதுபாட்டில் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு, சுமார் ₹ 6 லட்சம். மேலும், அந்த பண்ணை வீட்டிலிருந்த சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த பிரேம்குமார் (42), என்பவரை புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.      

விசாரணையில், அந்த பண்ணை வீடு கோவளத்தைச் சேர்ந்த ஒருவரது என்றும், அந்த வீட்டை மேடவாக்கத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் வாடகை எடுத்து மதுபானம் தயாரிக்க பயன்படுத்தி வந்ததாகவும், இவர்களுக்கு புதுச்சேரியிலிருந்து குமார் என்பவர் சாராயம் சப்ளை செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள செல்வம் மற்றும் குமார் ஆகியோர் மீது புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மதுபானம் தயாரிக்கும் ஆலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.