காமராஜர் பிறந்தநாள் விழாவுக்காக கட் அவுட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டையில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக, காமராஜர் ரத்ததான கழகம் சார்பில் நேற்று இரவு பேனர் மற்றும் கட் அவுட் வைக்கும் பணியில் அதே பகுதியை சேர்ந்த மணி (25), சரவணன் (24), அரவிந்தன் (24) உள்பட சில வாலிபர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மணி, சரவணன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதை பார்த்ததும், அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக அவர்களை மீட்டு, தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே மணி, சரவணன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். அரவிந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புகாரின்படி சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.