சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய 3 மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தை ஏற்று வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் தேரோட்டம் நடைபெறும் என்பதால், மதுரை மக்களவை தொகுதி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என வழக்கறிஞர் பார்த்தசாரதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும், வாக்குப் பதிவு நாளன்று கிறிஸ்துவ மக்களில் பெரிய வியாழன் பண்டிகையும் வருவதால் கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்றக்கோரி கோரி தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின் போது வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிப்பதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள தேவாலயங்களில் மக்கள் சுதந்திரமாக வழிபாடு நடத்த மாவட்ட தேர்தல் ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எந்த காரணம் கொண்டும் வாக்குச்சாவடிகளை மாற்ற இயலாது எனவும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. 

பின்னர் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, தமிழக அரசின் முடிவைக் கேட்ட பிறகே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குப்பதிவு நேரத்தை கூடுதல் நேரம் மட்டுமே வழங்க முடியும் என்று திட்டவட்டமாக கூறியது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் மதுரை சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய 3 மனுக்களையும் நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.